விபத்துக்குள்ளான பேருந்து.

 

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

க்ரைம்

சமயநல்லூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பக்தர்கள் படுகாயம்

என்.சன்னாசி

மதுரை: மதுரை சமயநல்லூர் அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென்று கவிழ்ந்தது. இதில் பழனி கோயிலுக்கு சென்ற 6 பக்தர்கள் காயமடைந்தனர்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.45 மணிக்கு பழனிக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தில் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் உட்பட 55 பேர் பயணித்தனர். இந்தப் பேருந்தை சுப்புராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். நடத்துநர் கண்ணன் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சமயநல்லூர் மேம்பாலத்தை கடந்து கட்டப்புலி நகரில் சென்றபோது, திடீரென ‘ஸ்டியரிங் பழுதானது. உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றார். ஆனாலும் அவரது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இடிபாடுக்குள் சிக்கிய பயணிகள் அலறி துடித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்த மதுரை கோயில் பாப்பாகுடி செல்வி (30), அப்துல்ரசாக் (70) மற்றும் பழனி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் உள்ளிட்ட 15 பேரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்துக்குள்ளான அரசுப் பேருந்தில் பயணித்தவர்களை மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து சமயநல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT