தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த கணவன், மனைவி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாக தெரிவித்தனர். ஆனால், அவர்களிடம் மருத்துவ சிகிச்சைக்கு வந்ததற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதன் பிறகு, இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்த போது, இருவரின் ஆசன வாயில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 967 கிராம் தங்கம் (22 கேரட்) மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், தங்கம் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து கடத்தல் குருவிகளாக செயல்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.