கோப்புப்படம்
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சேனாதிபதி. இவர் சேலம் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சபினாகுமாரி, மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
வீட்டில் தனியாக வசித்து வந்த சேனாதிபதி, வேலை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை செல்போனுடன் இணைத்திருந்தார். சென்னையில் இருந்தபடி செல்போன் மூலம் வீட்டின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. இதுபற்றி ஏத்தாப்பூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த இருவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.