சென்னை: மது பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சங்குப்பத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பெற்றோருடன் வசித்தவர் யான்சி (19). பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்குத் தயாரானார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பான தோழியைப் பார்க்க கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னை வந்தார்.
பின்னர் தனது 17 வயது தோழி உள்ளிட்ட மேலும் சிலருடன் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் மதுபாருக்குச் சென்றார்.
அங்கு திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள் சிலருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே நடனம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் காரில் வந்தவர்கள் இடுப்பை கிள்ளியதோடு, தனிமைக்கும் அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தகராறு முற்றி அங்கிருந்த பவுன்சர்கள் இரு தரப்பையும் வெளியேற்றினர். வெளியே வந்த பின்னரும், அவர்கள் சண்டையிட்டனர். அப்போதும் பவுன்சர்கள் தலையிட்டு சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
காரில் வந்த இளைஞர்கள் அந்த ஆத்திரத்திலேயே இருந்துள்ளனர். அப்போது ஒரே ஸ்கூட்டரில் சென்ற யான்சி, தோழியான சிறுமி மற்றும் நண்பர்கள் என 4 பேர் மீதும் அதிவேகமாக அடுத்தடுத்து இருமுறை இடித்துத் தள்ளினர். இதில் பலத்த காயம் அடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுமி உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கார் ஏற்றி இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பந்தப்பட்ட பாருக்கும் சீல் வைக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க காரில் வந்தவர்களை நோக்கி வேறு ஒரு கும்பல் கல்வீசித் தாக்குதல் நடத்தி தப்பியது. யான்சி தரப்பினர்தான் தாக்கிவிட்டு தப்புவதாக தவறுதலாக நினைத்த காரில் வந்தவர்கள், காரால் மோதி யான்சியை கொலை செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சம்பவத்தில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதனால் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.