சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து விமானங்கள் மூலம் சென்னைக்கு அதிக அளவில் போதைப்பொருள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. அதனால், சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அந்த விமானத்தில் வந்த தமிழகத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பிய அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ்களை திறந்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ரூ.4 கோடி மதிப்புள்ள 4 கிலோ 76 கிராம் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இருவரும் போதைப்பொருள் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.