சூர்ய நாராயணன்
திண்டுக்கல்: கொடைக்கானலில் தொழிலதிபரும், நடிகையின் தந்தையுமான சூர்ய நாராயணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சூர்ய நாராயணன் (73). இவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே உள்ளது. இவர், மாயாவி திரைப்படத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணாக நடித்த விஷ்ணுபிரியாவின் தந்தையாவார்.
சூர்ய நாராயணின் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் அறை எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் மாலை விடுதியில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
சூர்ய நாராயணன் மற்றும் அவரது உதவிக்கு ஆறுமுகம், முரளி ஆகிய 2 பணியாளர்கள் மட்டுமே விடுதியில் இருந்துள்ளனர். அப்போது, விடுதியில் தங்கியிருந்த 5 இளைஞர்களும், பணியாளர்களை கயிற்றால் கட்டிப்போட்டனர்.
பின்னர், சூர்ய நாராயணனையும் நாற்காலியில் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு, அவரது வாய், மூக்கை பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டி மூச்சு விட முடியாதபடி செய்து, கொலை செய்தனர்.
பின்னர், அந்த விடுதியில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு 5 பேரும்தப்பினர். இந்நிலையில், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஒரு பணியாளர் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீஸார் சூர்ய நாராயணனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமா?
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். ஏற்கெனவே, மகள் காதல் விவகாரத்தில் வாகன ஓட்டுநரை கூலிப்படையை ஏவி சூர்ய நாராயணன் கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சூர்ய நாராயணன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.