

விஐடி சென்னையில் நடந்த வைப்ரன்ஸ் சர்வதேச கலை விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கோப்பை வழங்கிய நடிகை ஸ்ரீலீலா, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்.
மேலக்கோட்டையூர்: விஐடி சென்னையில் ‘வைப்ரன்ஸ் 2026’ என்ற சர்வதேச கலைத் திருவிழாவின் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். விஐடி துணைத் தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரபல நடிகையும், மருத்துவருமான ஸ்ரீலீலா பேசியதாவது: கல்லூரி வாழ்க்கை அனைவருக்கும் முக்கியமானது. மாணவர்கள் தங்கள் இலக்குகளில் தெளிவாக இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அல்லது குறைந்தபட்சம் கல்லூரியை விட்டு வெளியேறும்போதாவது என்னென்ன விஷயங்களை செய்ய விரும்புகிறோம் என்று பட்டியல் தயாரித்து, அதன்படி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “விஐடி நிறுவனம் கல்வியில் மட்டுமல்ல, மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் முன்னிலை வகிக்கிறது. மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்து, உள்நாட்டில் மட்டுமின்றி, உலக அளவில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை வழங்கி, உயர்ந்த நிலையை அடைய விஐடி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
எஸ்எஸ்என் கல்லூரி சாம்பியன்: தொடர்ந்து, ‘வைப்ரன்ஸ் 2026’ கலை விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ஸ்ரீலீலா, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் கோப்பை வழங்கினர்.
விழாவில், விஐடி சென்னை இணை துணைவேந்தர் டி.தியாகராஜன், இயக்குநர் சத்தியநாராயணன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, வைப்ரன்ஸ் விழாவை பளுதூக்கும் வீராங்கானை டாக்டர் ஆர்த்தி அருண் கடந்த 18-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இந்தியா மட்டுமின்றி, பிரேசில், ஜப்பான், சிங்கப்பூர், தான்சானியா, கம்போடியா நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட மாணவகள் கலந்து கொண்டனர்.
டென்ட் கொட்டகையில் அமர்ந்து உற்சாகத்துடன் திரைப்படத்தை கண்டுரசித்த மாணவர்கள்
மாணவர்களைக் கவர்ந்த டென்ட் கொட்டகை:
இந்த விழாவில் பழைய டென்ட் கொட்டகையை நினைவுகூரும் வகையில் ‘VIT Talkies’ என்ற கொட்டகை (திரையரங்கு) அமைக்கப்பட்டிருந்தது. மணல் பரப்பு, நாற்காலிகள் மற்றும் மேஜைகள் என்று 3 வகையான பிரிவுகளில் பார்வையாளர்கள் மற்றும் மாணவர்கள் அமரும் வகையில் இது தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
டென்ட் கொட்டகையில் முதல் திரைப்படமாக எம்ஜிஆர் நடித்த மாபெரும் வெற்றித் திரைப்படம் `ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டது. இந்தப் படத்தின் பெட்டியை மாணவர்கள் குதிரை வண்டியில் வைத்து, மேள தாளங்கள் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டு வந்தனர்.
விஐடி சென்னையில் நடைபெற்ற `வைப்ரன்ஸ் 2026' சர்வதேச கலைத் திருவிழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த டென்ட் கொட்டகை.
விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் படப் பெட்டியைப் பெற்றுக்கொண்டு, டென்ட் கொட்டகையை திறந்துவைத்தார். மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று இலவச டிக்கெட் பெற்றனர். மேலும், மண் தரை மற்றும் நாற்காலிகளில் அமர்ந்து உற்சாகமாக திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்ட, இளைய தலைமுறை முற்றிலும் அறிந்திராத டென்ட் கொட்டகை அனுபவத்தை விஐடி சென்னை மீட்டெடுத்துள்ளதாக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் கூறினார்.