சென்னை: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பேபி.
இவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், ‘கொடுங்கையூரைச் சேர்ந்த வினோத் பாபு என்பவர் தமிழக குடிசை மாற்று வாரியத்தில் ஓட்டுநராக பணி செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், தண்டையார்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வீடுகளை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என நம்பி நான் உள்பட 11 பேர் ரூ.33 லட்சம் கொடுத்தோம். ஆனால், அவர் உறுதி அளித்தபடி வீடு வாங்கித் தரவில்லை. தற்போது தலைமறைவாகி விட்டார்.
எனவே அவரை கைது செய்து எங்களிடம் மோசடி செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.