சிவாச்சாரியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கார்த்தி, அரவிந்தராஜ், வெங்கடேசன், வேலு.
கும்பகோணம்: சிவாச்சாரியாரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோயில் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி.
இவரது மகன் மணிகண்டன்(45). இவர்கள் பாபநாசம் வட்டம் திருவைக்காவூர் சிவன்கோயில் தெருவில் வசித்து வந்தனர். அங்குள்ள சிவன் கோயிலில் ராமமூர்த்தியும், ஆடுதுறையில் உள்ள சிவன் கோயிலில் மணிகண்டனும் பூஜை செய்து வந்தனர்.
இந்நிலையில், 2015 ஜூன் மாதம் திருவைக்காவூர் மேலத்தெருவை சேர்ந்த கார்த்தி(39), சிவாச்சாரியார் மணிகண்டனை சந்தித்து, தனது திருமணத்தை நடத்தி வைக்குமாறு அழைத்துள்ளார். ஆனால், ஏற்கெனவே வேறு திருமணத்துக்கு முன்பணம் வாங்கிவிட்டதால் வர இயலாது என மணிகண்டன் கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவாச்சாரியார் மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் பட்டவர்த்தி பகுதியில் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கார்த்தி, அவரது உறவினர் அரவிந்தராஜ்(35) மற்றும் ராஜா (எ) ஹரிராஜா(25), வெங்கடேசன்(32), வேலு (எ) ஜெயவேல்(36) ஆகியோர் வழிமறித்து மணிகண்டனை கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இது தொடர்பாக கபிஸ்தலம் போலீஸார் விசாரணை நடத்தி 5 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ராஜா உயிரிழந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி, அரவிந்தராஜ், வெங்கடேசன், வேலு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.7,500 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பா.விஜயகுமார் ஆஜரானார்.