பொன்னேரி: சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் நிரேஷ்குமார் (35). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான இவர் கடந்த 3-ம் தேதி, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பெண் ஒருவருடன் இருந்தார்.
அப்போது மர்ம கும்பல், நிரேஷ்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், காயமடைந்த நிரேஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான சங்கர், தன் நண்பர்களுடன் சேர்ந்து நிரேஷ்குமாரை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, சங்கர் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வந்த மீஞ்சூர் போலீஸார், சங்கரின் நண்பரான விக்னேஷ் (28) என்பவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
மற்றவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில், மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியில் நேற்று முன் தினம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சங்கர் (28), கிஷோர் (28), ராகுல் டேவிட் (27), பவானி (27) என்ற பெண் என, 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதில் போலீஸார் துரத்தியபோது தப்பியோட முயன்று அத்திப்பட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த சங்கர், ராகுல் டேவிட் ஆகியோருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டுபோடப்பட்டது. கைதானவர்களிடம் இருந்து 4.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.