க்ரைம்

கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் மனைவியை கொன்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கைது

இரா.வினோத்

பெங்களூரு: பெங்களூருவில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நாகேஷ்வர் ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு பிறகு மனைவியை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியில் ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நாகேஷ்வர் ராவ் (72) தனது மனைவி சந்தியா (65) உடன் வசித்து வந்தார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இவர்களின் மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். நாகேஷ்வர் ராவ் இஸ்ரோ நிறுவனத்தில் பல்வேறு செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளில் துணை திட்ட இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

          

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நாகேஷ்வர் ராவுக்கும் அவரது மனைவி சந்தியாவை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது. பின்னர் தனது மகளை தொடர்புக் கொண்டு, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக அவர், மருத்துவர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

படுக்கை அறையில் பேச்சு மூச்சின்றி கிடந்த சந்தியாவின் உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தார். அதேவேளையில் கழுத்தை நெரித்ததற்கான ரத்த காயங்கள் இருப்பதை அறிந்து மருத்துவர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு சென்ற ஆவலஹள்ளி போலீஸார், நாகேஷ்வர் ராவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தனது மனைவி சந்தியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகேஷ்வர் ராவ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''நாகேஷ்வர் ராவ் மன அழுத்தம் தொடர்பான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகள் வெளிநாட்டிலே தங்கிவிட்டதால் விரக்தியில் இருந்துள்ளார்.

மேலும் தனது மரணத்துக்கு பிறகு தன் மனைவியை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் கொலை செய்ததாக கூறியுள்ளார். தன் மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டிருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்''என்றனர்.

SCROLL FOR NEXT