சென்னை: வியாபாரிகளை கடத்தி பணம் பறிக்க கத்தி, மிளகாய்ப் பொடியுடன் பதுங்கி இருந்த 5 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர். குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக போலீஸார் ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
அதன்படி, ஆர்.கே.நகர் போலீஸார் நேற்றுமுன்தினம் காலை ஆர்.கே.நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள சுண்ணாம்பு கால்வாய் புதிய மேம்பாலத்தின் கீழ், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஏடிஎம் மையங்களில் இருந்து தனியாக பணம் எடுத்து வரும் நபர்களையும், சாலையில் செல்லும் வியாபாரிகளையும் வழிமறித்து, கடத்தி கூட்டு கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு, கத்திகள், மிளகாய்ப் பொடி மற்றும் கட்டைகளுடன் ஆயத்தமாக இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் தண்டையார்பேட்டை துர்காதேவி நகரைச் சேர்ந்த முகிலன் (21), நெடுஞ்செழியன் நகர் லோகேஷ்ராஜ் (20), கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டத்தைச் சேர்ந்த மணிமாறன் (21), அபினேஷ் (25), தண்டையார்பேட்டை மாதா கோயில் தெருவைச் சேர்ந்த அமீது (22) என்பது தெரிந்தது.
பல்வேறு வழக்குகள்..
இதையடுத்து, 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் மற்றும் 2 கட்டைகள், மிளகாய் பொடி மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட முகிலன் மீது ஏற்கனவே கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகளும், லோகேஷ்ராஜ் மீது கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 3 வழக்குகளும், அமீது மீது ஒரு அடிதடி வழக்கும் இருப்பது தெரிய வந்தது.
மேலும், முகிலன் மற்றும் லோகேஷ்ராஜ் ஆகியோர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தின் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது.