மதுரை: தமிழகத்தில் உணர்வுப்பூர்வமான வழக்குகளை தவிர, பிற அனைத்து குற்ற வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை அனைவரும் பார்க்கும் வகையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், காவல் நிலையங்களில் பெண்கள் மீதான வன்கொடுமை, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்கொடுமை சட்ட வழக்குகளைத் தவிர்த்து, மற்ற வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைவரும் பார்க்கும் வசதி முன்பு இருந்தது.
தற்போது சிசிடிஎன்எஸ் 2.0 திட்டத்தில் முதல் தகவல் அறிக்கையை புகார் அளித்த நபர் மற்றும் விசாரணை அதிகாரி மட்டுமே பதிவிறக்கம் செய்யும் வசதியுள்ளது.
எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை நகலை பொதுமக்கள், வழக்கறிஞர்கள் ஆன்லைனில் பார்க்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில், முதல் தகவல் அறிக்கை நகலை புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பார்வையிட ஏற்கெனவே வசதி உள்ளது. போக்ஸோ மற்றும் சில குறிப்பிட்ட வழக்குகளைத் தவிர பிற வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை 48 மணி நேரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.