லதா
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் லதா (47). இவரும் இவரது நிறுவனத்தினரும் கடந்த 2008-ம் ஆண்டு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சமியுல்லாகானிடம் முதலீடு செய்தால் மாதம் 4 சதவீதம் லாபம் தருவதாகக் கூறி ரூ.35 லட்சம் பெற்றுள்ளனர்.
ஆனால், பணத்தை திருப்பித் தராமல் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சமியுல்லாகான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் 2009-ல் வழக்குப் பதிந்தனர். பின்னர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதே பாணியில், அண்ணா சாலையைச் சேர்ந்த இக்பால் ராஜாவிடம் லதா தரப்பினர் ரூ.43.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டது.
இந்த 2 வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் லதா தலைமறைவானார். அவரை கைது செய்ய 2016-ம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், சிட்லபாக்கத்தில் பதுங்கியிருந்த லதாவை (47) போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.