க்ரைம்

திருவாரூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்தபோது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(52). விவசாயி. இவரது மகன் ஆதித்யன்(18). டிப்ளமோ படித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை அப்பகுதியில் ஆதித்யன் டிராக்டரில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது தந்தை ராஜா விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விவசாய நிலத்துக்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து டிராக்டர் மீது விழுந்துள்ளது. இதில், ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடினார்.

இதைக் கண்ட ராஜா உடனடியாக மகனை காப்பாற்ற முயன்றார். இதில், ராஜா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT