சிம்யா, ஆறுமுகம்
திருப்பூர்: திருமணத்துக்கு பின்னர், இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பருடன் வெளியூர் சென்ற மகளைக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (48). இவர் குடும்பத்துடன் திருப்பூர் முருகம்பாளையத்தில் தங்கி, சாய ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சிம்யா (23). இவரது கணவர் பிரேம்குமார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி குழந்தையுடன் சிம்யா தலைமறைவானார். இது தொடர்பாக ஆறுமுகம், திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிம்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதித்தபோது, அதில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருடன் பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸார் குமரி சென்று, சிம்யா மற்றும் குழந்தையை நேற்று மீட்டு வந்தனர்.
பின்னர், சிம்யாவுக்கும், அவரது தந்தை ஆறுமுகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், சிம்யாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார்.
தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீஸார், சிம்யாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஆறுமுகத்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.