ஆம்பூர்: ஆம்பூர் அருகே மகனின் காதல் திருமண விவகாரத்தில் நடந்த குடும்பத் தகராறில் தந்தையின் 3-வது மனைவி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன். இவரது 2-வது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகன் அபிமன்யு. ராஜேஸ்வரி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்த நிலையில் முனியன் பேர்ணாம்பட்டு அடுத்த பெரியதாமல்செருவு கிராமத்தைச் சேர்ந்த கவிதா (42) என்பவரை 3-ஆவதாக திருமணம் செய்தார்.
முனியனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் அபிமன்யு சென்னையில் தன்னுடன் பணியாற்றி வந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த பிரதீபா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு அபிமன்யு தனது மனைவியுடன் பாலூர் பகுதியில் குடியிருந்து வந்தார். இந்நிலையில், அபிமன்யு மாற்று சமூக பெண்ணை, திருமணம் செய்தது பிடிக்காமல் முனியனுக்கும் கவிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அபிமன்யு மனைவி பிரதீபாவுக்கும் கவிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அபிமன்யு தாத்தா சாமுண்டி வந்து கவிதாவை கண்டித்துள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த அவர், அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த முனியனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீஸார் வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.