சென்னை: ஓசூர் பன்னாட்டு விமான நிலையம், அறிவுசார் வழித்தடம், சிப்காட் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களுக்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு ஓசூரை சேர்ந்த நமது நிலம் நமதே விவசாயிகள் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
விளைநிலங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விவரிக்க சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்கு முன்னதாக முக்கிய அரசியல் கட்சிகளை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டனர். அதன்படி சங்கத்தின் மாநில தலைவர் குமார ரவிக்குமார் தலைமையில் 67 பேர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றனர்.
ஆனால் அதிகப்படியான கூட்டம் வந்ததால் போலீஸார் அவர்களை கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட குமார ரவிக்குமார் கூறுகையில், “ கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டத்தில் உள்ள தசப்பள்ளி, கருப்பள்ளி, நந்தி மங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் அதனைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் உள்ள வளமான விளைநிலங்கள், எங்களது வருமானத்துக்கான ஒரே ஆதாரமாகவும் விளங்குகிறது.
பெரிய அளவிலான தொழில் திட்டங்களிலிருந்து இந்த வளமான விளைநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதை வலியுறுத்தி மனு கொடுக்க சென்றபோது போலீஸார் எங்களை கைது செய்தனர்” என்றார்.