புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள போலி மருந்து குடோ னுக்கு சீல் வைத்த சிபிசிஐடி போலீஸார். | படம்: எம்.சாம்ராஜ் |

 
க்ரைம்

ரூ.100 கோடி அளவுக்கு போலி மருந்துகள் பறிமுதல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சலைக்கு சீல்!

செய்திப்பிரிவு

புதுச்சேரி: பிரபல தனியார் மருந்து நிறுவ னம், புதுச்சேரியில் தங்கள் நிறுவனம் பெயரில் போலி மருந்துகளை தயாரிப்பதாக கடந்த மாதம் சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தது. அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவர், அந்த பிரபல நிறுவனத்தின் புதுச்சேரிக்கான வினியோகஸ்தர் உரிமையை பெற்று, அந்த மருந்து நிறுவனம் தயாரிக்கும் 36 வகையான மருந்துகளை போலியாக தயாரித்து, ஒரிஜினல் மருந்துகளுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அதன்பேரில், ராஜாவுடன் இருந்த ராணா மற்றும் மெய்யப்பன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். போலி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த குருமாம்பேட் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்த மூன்று குடோன்கள் மற்றும் திருபுவனைபாளை யத்தில் போலி மருந்து தயாரித்த தொழிற்சாலையை சோதனை நடத்தி சீல் வைத்தனர்.

மேலும், வழக்கில் தொடர்பு டைய 7 நிறுவனங்களில் சோதனை நடத்த நீதிமன்ற அனுமதி பெற்றனர். அதன் பேரில் கடந்த 3-ம் தேதி சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவினர், புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள மருந்து ஏஜென்ஸி, பூரணாங்குப்பத்தில் ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலை, இடையார் பாளையத்தில் உள்ள குடோன் ஆகிய 3 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், ஒரு ஒரிஜினல் மருந்துக்கு 4 போலி மருந்துகள் என்ற விகிதத்தில் கலந்து விற்பனைக்கு விடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவ்வாறாக 36 வகையான மருந்துகள் பல கோடி ரூபாய்க்கு பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் மற்றும் மூலப் பொருட்கள், இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 2-வது நாளாக 3 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. ரூ. 100 கோடிக்கு மேல் போலி மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இந்த வழக்கில், அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது.

அதன்படி, சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுச்சேரி வந்து, சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் பேரில் சோதனை நடத்தி, பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களையும் பெற்றுச் சென்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்த வருமான வரித்துறை, ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளுக்கு புதுச்சேரி டி.ஜி.பி அனுமதியுடன், சிபிசிஐடி போலீஸார் பரிந்துரை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்கெனவே சோதனை நடத்தப்பட்ட புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள தனியார் மருந்து ஏஜென்ஸி, பூரணாங்குப்பத்தில் ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலை, இடையார் பாளையத்தில் உள்ள குடோன் ஆகிய 3 இடங்களில் நீதிமன்ற அனுமதி பெற்று மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கீர்த்தனா, இந்துமதி, ஜெனிபர் ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி ஆகியோர் நேற்று சீல் வைத்தனர்.

மேலும் அங்கிருந்த 30 கணினிகள் மற்றும் ஹார்ட்டிஸ்குகளை போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தவும், சம்பந்தப் பட்டவர்களை கைது செய்யவும் சிபிசிஐடி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT