புதுச்சேரி: பல மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போலி மருந்து விவகாரத்தில் முக்கிய குற்றவாளி ராஜா என்ற வள்ளியப்பன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று (டிச.10) சரண் அடைந்தார்.
நாடு முழுவதும் பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் புதுவை மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது சிபிசிஐடி போலீஸாரால் கண்டறியப்பட்டது. மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரை, இதயநோய், ரத்த அழுத்தம் உட்பட பிரதான நோய்களுக்கான மருந்துகளை புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலையில் போலியாக தயாரித்து வந்துள்ளனர்.
இந்த தொழிற்சாலைக்கு தொடர்புடைய ராணா, மெய்யப்பன் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போலி தொழிற்சாலை நடத்திய உரிமையாளர் ரெட்டியார்பாளைத்தைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் ராஜா தலைமறைவானார். அவர் புதுவை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் மொத்தம் 3 இடங்களில் தொழிற்சாலைகள் மற்றும் 10 குடோன்கள் உள்ளிட்டவை சீல் வைக்கப்பட்டு பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள், போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிபிசிஐடி போலீஸாரும், சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதுவை மருந்து கட்டுப்பாட்டு வாரியமும் ராஜா மீது தனி வழக்கு பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆலோசனைகளையும் கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா, வழக்கில் தொடர்புடைய விவேக் ஆகியோர் இன்று புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால் முன்பு சரணடைந்தார். வழக்கில் மேலும் பலர் போலீஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜா மீது டெல்லி, ஆந்திரா, உத்திரப்பிரதேச மாநிலங்களிலும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சரணடைந்த ராஜாவை போலீஸார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி, சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.