நந்தகுமார்
திருவள்ளூர்: திருவேற்காடு பகுதியில் வசித்து வந்தவர் நந்தகுமார் (53). இவர் தன் வீட்டருகே வசித்து வந்த சிறுமி குளிக்கும்போது, செல்போனில் புகைப்படம் எடுத்து அதை காண்பித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமையும் செய்து வந்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இதுகுறித்து திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை மீட்டு நடத்திய விசாரணையில், சிறுமியை நந்தகுமார் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஆர்எம்சி (போரூர்) அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டம் மற்றும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நந்தகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், நந்தகுமார் மீதான குற்றங்களில் பல நிரூபணமாகின. இதையடுத்து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பு அளித்தார்.
அதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நந்தகுமாருக்கு, போக்சோ உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதமும், காயம் ஏற்படுத்துதல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் என, 18 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
மேலும் இத்தண்டனைகளில், போக்சோ உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தண்டனைகளை ஏக காலத்திலும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனைகளை தனித் தனியாகவும் நந்தகுமார் அனுபவிக்க வேண்டும் என தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் ரூ.2 லட்சம் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயை 2 மாதத்துக்குள் சிறுமிக்கு வழங்க நீதிபதி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.