க்ரைம்

ஆவடியில் கஞ்சா, போதை மாத்திரை கடத்திய 6 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆவடி அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 140 கிலோ கஞ்சா, 2,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெற்றி நகர் முதல் தெருவில் ஒரு வீட்டின் அருகே 3 பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது. அதில் 62 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தயாளன் (21), உதய பிரசாந்த் (21), கோபால கிருஷ்ணன் (21) என்பது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து மேலும் 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் இருந்து கஞ்சாவை வாங்கி, போலீஸ் சோதனைகளில் சிக்காமல் இருக்க தொழில்முறை பைக் ரைடர்கள் போல மாறுவேடம் அணிந்து, பைக் டூரிஸ்ட் குழுக் களோடு சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர்.

பின்னர், சிறு கடத்தல் காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்துள்ளனர். இந்த 4 பேர் மீதும் ஆவடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல நேற்று அயப்பாக்கம் போலீஸார் டோனே கலா கேம்ப் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21), ருகேஷ் குமார் (19) ஆகிய இருவரையும் சோதனை செய்ததில், அவர்களிடமிருந்து 40 கிலோ கஞ்சா, 1,700 நைட்ரா செப்பம் மாத்திரைகள், 300 டாபெண்டடோல் மாத்திரைகள் என மொத்தம் 2,000 போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டன. மேற்படி எதிரிகள் இருவரையும் போலீஸார் கைது செய்து, அயப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT