ரஞ்சித்குமார்
திருச்சி: திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் கொலை செய்யப்பட்டது சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் ரஞ்சித்குமார் (38). திமுக இளைஞரணியில் கூத்தைப்பார் பேரூர் செயலாளராகவும், பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார்.
மேலும், திருவெறும்பூர் அரசு ஐடிஐ எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வந்தார். இந்நிலையில், திருவெறும்பூரில் இருந்து நவல்பட்டு செல்லும் சாலையில் புதுத் தெரு பகுதியில் ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து நவல்பட்டு போலீஸார் அங்கு சென்று ரஞ்சித்குமார் உடலை மீட்டு, பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட எஸ்.பி. செல்வநாக ரத்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோப்ப நாய் காவிரி வரவழைக்கப்பட்டு போலீஸார் சோதனை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்ததில், 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர், ரஞ்சித்கு மாரை வெட்டிக் கொன்றதும், அதில் இருந்த பலரும் சிறார் போன்று இருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ரஞ்சித்குமாருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார்.