சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு சால்வை அணிவித்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகளுக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (48). மீன்கள் மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். அதிமுகவில் கொளத்தூர் தொகுதி எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும் உள்ளார்.
வட்டச் செயலாளர் தகராறு: இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, திருத்தணி மற்றும் திருவள்ளூர் பகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கொளத்தூர் 200 அடி சாலை வழியாக சென்றார். அப்போது, அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த வகையில், பழனிசாமிக்கு ஆறுமுகம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. பழனிசாமி சென்ற பின்னர், அங்கிருந்த வட்டச் செயலாளர் முருகதாஸ், ஆறுமுகத்தை பார்த்து, ‘‘நீங்கள் ஏன் பொதுச்செயலாளருக்கு சால்வை அணிவித்தீர்கள்? வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு தானே மரியாதை செய்ய வேண்டும், அவரை மீறி நீங்கள் எப்படி சால்வை அணிவித்தீர்கள்?’’ எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஆறுமுகத்தைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆறுமுகம், பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, அதிமுக நிர்வாகி முருகதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.