சென்னை: மாநில மனித உரிமை ஆணைய அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத் திறனாளி இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்(30). மாற்று திறனாளியான இவர், தற்காலிகமாக சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தங்கி உள்ளார்.
இந்நிலையில், இவர் பசுமை வழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளிப்பதற்காக நேற்று காலை சென்றுள்ளார். அப்போது, அங்கு அவர் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கு பணியில் இருந்த போலீஸார் தீயணைப்பான் மூலம் தீயை அணைத்தனர். பின்னர், உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து அபிராமபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, ஆல்பர்ட் மீது 2 மாதங்களுக்கு முன்னர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிகுரு லட்சுமி என்ற பெண் அங்குள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில், ஆல்பர்ட்டுடன் வர்த்தக முதலீடு செய்வதற்கு ரூ.1.75 லட்சம் கொடுத்ததாகவும், அதனை அவர் திருப்பித் தரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, பணத்தை ஜன.27-ம் தேதி திருப்பி வழங்குவதாக உறுதி அளித்து அந்தப் பெண்ணுக்கு ஆல்பர்ட் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை திருப்பி வழங்கவில்லை.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் நெருக்கடி கொடுத்ததால் ஆல்பர்ட் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.