க்ரைம்

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: சுமை தூக்கும் தொழிலாளி கைது

செய்திப்பிரிவு

ஆவடி: சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சிறுமி, தன் வீட்டருகே உள்ள மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனே சிறுமி கத்தி கூச்சலிட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்நபர் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேசன்(40) என்பதும் சுமை தூக்கும் தொழிலாளியான அவர், கூலி அடிப்படையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு சேமிப்புக் கிடங்குகளிலிருந்து மதுபான பாட்டில்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று, இறக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கணேசனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT