புதுடெல்லி: டெல்லி அருகே காஜியாபாத்தில் ‘ஆரா சிமேரா சொசைட்டி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் உமேஷ் சர்மா - தீப்ஷிகா தம்பதிக்கு 2 வீடுகள் உள்ளன. இதில் ஒன்றில் அவர்கள் வசித்து வந்தனர். மற்றொன்றை வாடகைக்கு விட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வீட்டுக்கான வாடகையை வசூலிக்க தீப்ஷிகா (48) புதன்கிழமை இரவு சென்றார். ஆனால் அவர் வெகு நேரம் வீடு திரும்பாததால் பணிப்பெண் அவரைத் தேடிச் சென்றார்.
இதில் வாடகை வீட்டில் தீப்ஷிகாவின் உடல் ஒரு சிவப்புப் பைக்குள் திணிக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்ஷிகாவை கொலை செய்ததாக வீட்டில் குடியிருந்த அஜய் குப்தா (35), அக்ரிதி குப்தா (33) தம்பதியை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.