கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தம்பதியை தாக்கி 23 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில், உறவினர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பர்கூர் அருகே கல்லேத்துப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுந்தரேசன் (55). இவரது மனைவி மஞ்சுளா (50). இவர்கள் பிப்ரவரி 13-ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 5.30 மணி அளவில் வீட்டின் உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 3 பேர் தம்பதியை தாக்கி, வீட்டிலிருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.50,000-ஐ கொள்ளையடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன், காவல் ஆய்வாளர்கள் இளவரசன், அன்பழகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.
தொடர் விசாரணையில் மஞ்சுளாவின் உறவினரான பர்கூர் அருகே பட்லப்பள்ளி ஊராட்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த பசுபதி (31) மற்றும் சிவக்குமார் (31), முருகன் (31) ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, 3 பேரையும் இன்று போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 20 பவுன் நகையை மீட்டனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “நகை கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் மின்சாரம் மற்றும் கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டித்திருந்தனர். இதனால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனிடையே கொள்ளையில் ஈடுபட்ட 3 பேருக்கும் இடையில் நகையைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பான தகவல் வெளியில் பரவியது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் கைதான 3 பேரும் முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது” என்றனர்.