ரூ.36,660 கோடி முதலீட்டில் மதுரைக்கு வெறும் 4% மட்டும்தானா? - தொழில் ஆர்வலர்கள் ஏமாற்றம்

ரூ.36,660 கோடி முதலீட்டில் மதுரைக்கு வெறும் 4% மட்டும்தானா? - தொழில் ஆர்வலர்கள் ஏமாற்றம்
Updated on
2 min read

மதுரை: மதுரையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ரூ.36,660 கோடி மொத்த ஒப்பந்தத்தில் வெறும் ரூ.1,300 கோடி அளவுக்கு, அதாவது 4 சதவீத முதலீடு மட்டுமே மதுரைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளதால் தொழில் முனைவோர், மாநகர கட்டமைப்பு மேம்பாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சுற்றுலா, மருத்துவம், வணிகத்தில் சிறந்து விளங்கும் மதுரை கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே தொழிற்சாலைகள் முதலீடுகளில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலாவது, இந்த அவலம் போக்கப்படும், மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

திமுக ஆட்சி நிறைவடையும் நேரத்தில் மதுரையில் நேற்று ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர்கள் மாநாடு முதல் முறையாக நடந்தது. இந்த மாநாட்டில் ரூ.36,660 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தத் தொழில் முதலீடுகளால் 56,766 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “கோயில் நகரமான மதுரையை தொழில் நகரமாக மாற்றுவோம்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆனால், முதல்வர் முன்னிலையிலான ரூ.36,660 கோடி ஒப்பந்தத்தில் வெறும் 4 சதவீதம் முதலீடு அளவுக்கே மதுரைக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், மேலூர் அருகே புதிதாக அமையும் சிப்காட்டில் இந்தோனேசியா காலணி நிறுவனத்தைத் தவிர பெரிய தொழில் முதலீடுகள் மதுரைக்கு இல்லை என்று தொழில் முனைவோரும், பொதுமக்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இது குறித்து மதுரை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக் குழுமத் தலைவர் பாலமுருகன் பழனி, ஆலோசகர் சரவணன், மென்பொருள் பொறியாளர் கந்தசாமி ஆறுமுகம் ஆகியோர் கூறியது: “முதல் முறையாக முதலீட்டு மாநாட்டை மதுரையில் நடத்திய முதல்வர், தொழில் துறை அமைச்சருக்கு நன்றி. தென் தமிழகத்துக்கு அண்மைக் காலமாக தொடர்ச்சியாக முதலீடுகள் வரத்தொடங்கியிருப்பது வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அதே நேரத்தில், மதுரையில் நேற்று நடந்த தொழில் முதலீட்டு மாநாடு மாவட்ட மக்களை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது. இந்த மாநாடு அறிவிக்கப்பட்டபோது பெரும் எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால், மாநாட்டில் ரூ.36,660 கோடிக்கு முதலீட்டு அறிவிப்புகள், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் மதுரைக்குக் கிடைத்தது வெறும் ரூ.1,300 கோடி முதலீடு மட்டுமே. மொத்த முதலீட்டில் இது வெறும் 4 சதவீதம்தான்.

இந்த முதலீடுகளால் முதல்வர் கூறியதுபோல் கோயில் நகரம், தொழில் நகரமாக மாற வாய்ப்பு இல்லை. அதிலும் மிக முக்கியமான பெரிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவை பிற மாவட்டங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. காலணி தொழிற்சாலையைத் தவிர எந்த முன்னணி நிறுவனங்களும் மதுரையில் அமைய உள்ளதாக கையெழுத்தாகவில்லை.

இந்த தொழில் முதலீடுகளால் 15 ஆயிரம் வேலைவாய்ப்பு இருப்பதாக பெரிதாக காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், தற்போது அறிவித்த முதலீடுகளால் 1,500 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

கடலூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், கோவை, தூத்துக்குடி, திருச்சி, தேனி போன்ற மற்ற மாவட்டங்களுக்குத்தான் அதிக முதலீடுகள் சென்றுள்ளன. தேனி மாவட்டத்துக்குக் கூட ரூ.2270 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்து வேலைவாய்ப்புகள் முழுமையாக கிடைக்குமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இனியாவது, தென் தமிழகத்தின் மைய நகரமாகவும் சுற்றுலா, மருத்துவம், வணிகத்தில் சிறந்து விளங்கும் மதுரைக்கு உயர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலீட்டில் அதிகப் பங்கு வழங்குவதற்கு தமிழக அரசும், ‘கெய்டன்ஸ் தமிழ்நாடு’ம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

ரூ.36,660 கோடி முதலீட்டில் மதுரைக்கு வெறும் 4% மட்டும்தானா? - தொழில் ஆர்வலர்கள் ஏமாற்றம்
பேட்டரியை பயனர்களே மாற்றக் கூடிய ‘Jolla போன்’ அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in