க்ரைம்

சென்னை | தீபாவளி சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த தம்பதி கைது

செய்திப்பிரிவு

சென்னை: கவர்ச்​சிகர​மான தீபாவளி சீட்டு அறி​விப்​பு​களை வெளி​யிட்​டு, பொது​மக்​களிடம் ரூ.28 லட்​சம் வரை வசூலித்து மோசடி செய்​து​விட்​டு, ஓராண்​டாக தலைமறை​வாக இருந்த தம்பதியை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை தி.நகர், தர்​மாபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் சங்​கீத வாணி (32). இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாண்டிபஜார் காவல் நிலை​யத்​தில் புகார் ஒன்றை அளித்​தார்.

          

அந்​தப் புகாரில், “எங்​கள் பகு​தி​யில் வசிக்​கும் தினேஷ் குமார் (34) மற்​றும் அவரது மனைவி புவனேஸ்​வரி (32) ஆகியோர் `பி.ஜி. ஃபண்ட்' என்ற பெயரில் தீபாவளி சீட்டு நடத்​தி, மாதம் ரூ.1,000 வீதம் 12 மாதங்​கள் கட்ட வேண்​டும். பதிலாக 2 கிராம் தங்க நாண​யம், 20 கிராம் வெள்​ளி, பட்​டாசு மற்​றும் இனிப்​பு​கள் வழங்​கப்​படும் என அறி​வித்​திருந்​தார்.

இதை நம்பி எனது பெயரிலும், எனது தோழிகள் மற்​றும் உறவினர்​களான சுகந்​தி, ஈஸ்​வரி, மணி, நாகலட்​சுமி ஆகியோரின் பெயர்​களி​லும் மொத்​தம் 250 கார்​டு​கள் எடுத்து மாதந்​தோறும் பணம் செலுத்தி வந்​தேன்.

ஆனால், தீபாவளி நெருங்​கிய நேரத்​தில் உறு​தி​யளித்​த​படி தங்​கம் மற்​றும் பொருட்​களை வழங்​காமல், வசூலித்த ரூ.28 லட்​சத்​துடன் தம்பதியினர் திடீரென தலைமறை​வாகினர். அவர்​களை கண்​டு​பிடித்​து, பணத்தை திரும்ப பெற்று தர வேண்​டும்” எனக் குறிப்​பிட்​டிருந்​தார்.

சங்​கீத வாணி​யின் புகாரின் பேரில் பாண்டி பஜார் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை மேற்​கொண்டு வந்​தனர். கடந்த ஓராண்​டாக போலீ​ஸார் இவர்​களைத் தேடி வந்த நிலை​யில், நேற்று முன்​தினம் தினேஷின் செல்​போன் சிக்​னல் மாங்​காடு பகு​தி​யில் காண்​பித்​தது.

இதனைத் தொடர்ந்து தனிப்​படை போலீ​ஸார் அங்கு விரைந்து சென்​று, பதுங்​கி​யிருந்த தினேஷ் குமார் மற்​றும் புவனேஸ்​வரி ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். போலீ​ஸார் நடத்​திய முதற்​கட்ட விசா​ரணை​யில், பொது​மக்​களிடம் வசூலித்த பணத்தை அதிக வட்​டிக்கு ஆசைப்​பட்டு தம்பதியினர் வெளி​யில் கடனாகக் கொடுத்​தது தெரிய​வந்​தது.

கொடுத்த பணம் திரும்ப வராத​தால், சீட்டு போட்​ட​வர்​களுக்கு உரிய பொருட்​களை வழங்க முடி​யாமல் தம்பதியினர் தலைமறை​வாகி​யுள்​ளனர். கைது செய்​யப்​பட்ட தம்பதியினர் இரு​வரும் சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தப்​பட்​டு, சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT