பழனியப்பன், செல்வராஜ்
தஞ்சாவூர்: திருவோணம் அருகே கூட்டுறவு வங்கியில் அடகு வைக்க வந்த விவசாயிகளிடம் 12 பவுன் நகைகளை பெற்று, பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த கூட்டுறவு வங்கியின் செயலாளர், எழுத்தர் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தை அடுத்த தளிகைவிடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நல்லையன், வைரக்கண்ணு, முருகேசன்.இவர்கள் 2023-ம் ஆண்டு தளிகைவிடுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தங்களின் நகைகளை அடகு வைக்க தனித்தனியாக சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு பணியில் இருந்த வங்கிச் செயலாளர் செல்வராஜ், எழுத்தர் பழனியப்பன் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து 12 பவுன் நகைகளை அடகுவைக்க பெற்றுக் கொண்டு, மறுநாள் வந்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.
அதன்படி, விவசாயிகள் 3 பேரும் மறுநாள் சென்று பணத்தை கேட்டபோது, அலுவலர்கள் பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், செல்வராஜ், பழனியப்பன் ஆகியோர் மீது துறைரீதியாக விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இதனால் அவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில், புகாரின் பேரில் திருவோணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் செல்வராஜ், பழனியப்பன் ஆகியோர் விவசாயிகளிடம் நகைகளைப் பெற்று, தனியார் அடகுக் கடைகளில் அடகு வைத்து, மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.