திருவள்ளூர்: திருத்தணி அருகே உள்ள எல்.என் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (30). கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த மார்ச் 1ம் தேதி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தன் உறவினரை பார்த்துவிட்டு, பேருந்துக்காக நீதிமன்றம் அருகே இரவு 11 மணியளவில் காத்திருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர், ராஜாவிடம், பேருந்து இங்கே நிற்காது. அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் நிற்கும். அங்கு விட்டு விடுவதாக கூறி அவரை பைக்கில் ஏற்றியுள்ளனர். ஆனால், அவர்கள் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல், ராஜாவை புல்லரம்பாக்கம் பகுதிக்கு கடத்தி சென்று, அங்குள்ள அம்மன் கோயில் பின்புறம் அவரை தாக்கி கையில் வைத்திருந்த ரூ.6,850, 2 செல்போன்களை பறித்துவிட்டு, தப்பியோடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ராஜா, அங்கேயே இரவு தங்கி, மறுநாள் அதிகாலை திருவள்ளூர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, சொந்த ஊர் திரும்பியுள்ளார். இது குறித்து, திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் மார்ச் 2-ம் தேதி ராஜா புகார் அளித்துள்ளார். திருவள்ளூர் எஸ்பி பிரனீத் உத்தரவின் பேரில், புல்லரம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சற்குணம் மகன் ஜாக் என்ற விஜயராஜ் (20), அவரது நண்பரான, புல்லரம்பாக்கம் ஆதி (22) ஆகியோரை புல்லரம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.