க்ரைம்

திருவாரூர் | ஆன்லைனில் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து பெற்று பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் சிலர், கூரியர் மூலமாக போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதாக மன்னார்குடி டிஎஸ்பி மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், கடந்த சில வாரங்களாக தனிப்படை போலீஸார், விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, மன்னார்குடி அருகே எடைகீழையூரில் தினேஷ் (20) என்ற கல்லூரி மாணவர் ஒருவருக்கு, கூரியர் மூலம் நேற்று போதை மாத்திரை வந்ததை உறுதி செய்து, கூரியர் டெலிவரி கொடுக்கும்போதே கையும் களவுமாக போலீஸார் பிடித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த தகவலைக் கொண்டு நாக்பூரில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி அவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

தஞ்சாவூரில் அரசு கல்லூரியில் தினேஷ் பிபிஏ மூன்றாம் ஆண்டு படிப்பதும், அவருடன் சேர்ந்து அம்மாபேட்டையைச் சேர்ந்த அர்னால்டு (19), மன்னார்குடி பகுதி கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் தமிழழகன் (19), தயாநிதி (19), மன்னார்குடியைச் சேர்ந்த சபரிநாதன் (19) ஆகியோரும் போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உடனடியாக ஐந்து பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து நூறு போதை மாத்திரைகள், மூன்று செல்போன்கள், இரண்டு மோட்டார் பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தி உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT