சென்னை: கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (19). மதுரவாயல் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரித்திகா என்பவர் அறிமுகமாகி, பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ரித்திகா இன்ஸ்டாகிராமில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பணம் தேவைப்படுவதாக சசிகுமாரிடம் கேட்டபோது, அவர் அவ்வப்போது சிறிது சிறிதாக மொத்தம் ரூ.1.87 லட்சம் கொடுத்தாராம்.
இந்நிலையில் ரித்திகா வேறொரு நபரைக் காதலிப்பது சசிகுமாருக்கு தெரியவந்து, இதுகுறித்து அவர் கேட்டபோது, தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இது ஒருபுறம் இருக்க கல்லூரிக்கு கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை சசிகுமார் ரித்திகாவுக்கு சிறிது சிறிதாக கொடுத்ததால், கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல், கல்லூரி நிர்வாகம் அவரை வெளியேற்றியது.
இதனால் வேதனையடைந்த சசிகுமார், ரித்திகாவிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, பணம் தர மறுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி இரவு, அப்பு என்பவர் சசிகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, ரித்திகா பணம் தர உள்ளதாகவும், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் வருமாறும் கூறியதால், சசிகுமார் அங்கு சென்றுள்ளார்.
அங்குகாரில் இருந்த ரித்திகா மற்றும் அவரது தோழி உட்பட 4 பேர் பணத்தை தருவதாகக் கூறி தாம்பரம் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்றனர். பின்னர் தாம்பரம் அருகே காரில் இருந்த ரித்திகா உள்ளிட்ட 4 நபர்கள் மற்றும் அங்கிருந்த சுமார் 5 பேர் சேர்ந்து சசிகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கி, அருகிலிருந்த சாக்கடைக்குள் தள்ளிவிட்டு தப்பினர்.
சிஎம்பிடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் சசிகுமாரை கடத்தி தாக்கிய கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ரித்திகா (21), அவரது கூட்டாளிகள் மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சஞ்சய் (22), சேலையூர் தர்ஷினி (19), மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த மோட்டு என்ற சரவணன் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.