மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
க்ரைம்

தூத்துக்குடி - குளத்தூர் அருகே ப்ளஸ் 2 மாணவி கொலை - உறவினர்கள் போராட்டம்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: குளத்தூர் அருகே காட்டுப் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்புராஜ். இவரது 17 வயது மகள் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வை அவர் எழுதி வந்தார்.

நேற்று மாலை 6 மணிக்கு அவர் வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். ஒரு மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது தந்தை சுப்புராஜ் மற்றும் உறவினர்கள் காட்டுப் பகுதிக்கு சென்று தேடினர். பின்னர் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கிருந்த போலீஸார் பள்ளி மாணவி என்பதால் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.

          

இதையடுத்து சுப்புராஜ் உள்ளிட்டோர் இன்று காலை விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கும் புகார் பெறப்படாததால், மீண்டும் குளத்தூர் காவல் நிலையம் வந்து, புகார் அளித்தனர்.

இதற்கிடையே, இன்று மாலை காட்டுப் பகுதியில் மாணவி முகத்தில் காயங்களுடன் இறந்துகிடப்பதாக தகவல் கிடைத்தது. குளத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து ஆத்திரமடைந்த சுப்புராஜ் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குறுக்குச்சாலை - ராமேசுவரம் சாலையில் வேடநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

மாணவி சடலத்தை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும், அவரது மரணத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், புகார் கொடுக்க சென்ற போது அலைக்கழித்த குளத்தூர் காவல் நிலையம் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

தகவல் அறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும், இரவு 8 மணியை கடந்தும் போராட்டம் தொடர்ந்ததால், பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT