சீனிவாசன்
சென்னை: சென்னையில் விநாயகர் ஊர்வல தகராறில் விழாக் குழுவை சேர்ந்த மாநகர பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 6 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, ராமாபுரம் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (45). இவர் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று முன்தினம் அங்குள்ள ராஜ கணபதி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு அப்பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் ஊர்வலம் வெங்கடேஷ்வரா நகரின் 13-வது தெரு வழியாக சென்றபோது, பாதியிலேயே திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சாமி ஊர்வலத்தை காண காத்திருந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து விழாக் குழுவினரிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, விழாக்குழுவை சேர்ந்த மாநகர பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அனிஸ்குமார், சுரேஷ், வீரா, சஞ்சய், ரிதீஷ், ராஜேஷ் ஆகியோருக்கும், ஐ.டி. நிறுவன ஊழியர் ஆனந்த் (35), புவனேஷ், தினேஷ், அஸ்வின், ஹரி, குட்வின் உள்ளிட்டோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பின்னர் கைகலப்பாக மாறியது.
தகவல் அறிந்த ராமாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், ஆனந்த், புவனேஷ் உள்பட 6 பேர், விழாக்குழுவை சேர்ந்த அனிஸ்குமாரின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையறிந்த சீனிவாசன் உள்ளிட்டோர் அங்கு ஓடிச்சென்று எதிர்தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஆனந்த், சீனிவாசனின் மார்பில் ஓங்கி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சீனிவாசன் மயங்கி விழுந்தார்.
நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சீனிவாசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராமாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து ஐ.டி. நிறுவன ஊழியர் ஆனந்த், ஹரி உள்ளிட்ட 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.