இனாவோபி சிங்
சென்னை: வட மாநில சைபர் மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட வழக்கில் மோசடி தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அல்லது காவல்துறை அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, `உங்கள் ஆதார் எண் குற்ற வழக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது', `உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்' என்று கூறி வீடியோ அழைப்பின் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன.
மேலும் அதிக லாபம் தரும் முதலீடு, ஆன்லைன் பங்கு வர்த்தகம், கிரிப்டோ முதலீடு, போலி வேலைவாய்ப்பு போன்றவை மூலம் பணம் பறிக்கும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
சென்னையில் இதுபோன்ற 8 வழக்குகளில் ரூ.31.10 கோடி மோசடி நடந்தது தொடர்பாக காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி மேற்பார்வையில், சைபர் க்ரைம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த குழுக்கள் மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்குச் சென்று உள்ளூர் போலீஸாருடன் இணைந்து 14 பேரை கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தது. விசாரணையில் ஒரு டிஜிட்டல் கைது மோசடி வழக்கில் மட்டும் ரூ.14.74 கோடி பறிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில் ரூ.4.78 கோடி மோசடி பணத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டன. மேலும் நீதிமன்ற உத்தரவின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.94 கோடி மீட்டுத் தரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய நபராகக் கருதப்படும் மணிப்பூரைச் சேர்ந்த தவுனாவ்ஜம் இனாவோபி சிங் (35), என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
ஆன்லைன் வர்த்தக மோசடியில் சிக்கிய முதியவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 லட்சத்தை கும்பலுக்கு மாற்றுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
சந்தேகம் வராமல் இருக்க டெலிவரி ஊழியர் போல் உடையணிந்து, பல மொழிகளில் பேசும் திறனை பயன்படுத்தி மாநிலங்களுக்கு இடையே பணம் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக பரிமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவரிடமிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், டேப்லெட், 23 ஏடிஎம் கார்டுகள், காசோலைகள், வங்கி பாஸ் புத்தகங்கள், பாஸ்போர்ட், ஆதார்,
பான் அட்டைகள், வாடகை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளிடமிருந்தும் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தனித்தனி குழுக்கள்
விசாரணையில் மோசடி கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. போலி வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்தல், மோசடி பணத்தை பல கணக்குகளுக்கு மாற்றுதல், அந்தப் பணத்தை ரொக்கமாக மாற்றி கைமாறச் செய்தல் ஆகியவற்றை தனித்தனி குழுக்களாக சேர்ந்து செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அல்லது போலீஸ் அதிகாரிகள் யாரும் வீடியோ அழைப்பில் `டிஜிட்டல் கைது' செய்வதில்லை.
வங்கி விவரங்களையோ, ஓடிபி எண்ணையோ கேட்பதுமில்லை. அதிக லாபம் தருவதாகக் கூறும் முதலீட்டு இணைப்புகள், அறிமுகமில்லாத நபர்களின் முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் சமூக வலைதளங்களில் வரும் நிதிச் சலுகைகளை நம்பக் கூடாது.
இதுபோன்ற மோசடிகளை சந்தித்தால் உடனடியாக `1930' என்ற தேசிய சைபர் உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும்.
மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் உடனடியாக புகார் பதிவு செய்தால், மோசடி செய்யப்பட்ட தொகையை முடக்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்'' என்றனர்.