கும்பகோணம்: திருவிடைமருதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த மாமியாருடன் சென்னை இளைஞர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் பிள்ளையாம்பேட்டை ராஜலட்சுமி நகர் விரிவாக்க பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. சலூன் கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி, கும்பகோணத்தில் தையலராக உள்ளார்.
கடந்த அக்.23-ம் தேதி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, இருவரும் வேலைக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் கார்த்தி வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளிப் பொருட்கள், ரூ.2.50 லட்சம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
நகை, பணம் மீட்பு
இந்நிலையில் கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நேற்று முன்தினம் சுற்றித்திரிந்த ஒரு பெண் உட்பட 2 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த குணசேகர்(40), அவரது மாமியாரும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஹானாபேகம்(59) என்பதும், இவர்கள்தான் கார்த்தி வீட்டில் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.
வேறு வழக்குகளில் தொடர்பா?
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து, திருடுபோன நகைகள், பொருட்கள், பணத்தை மீட்டனர். தொடர்ந்து, குணசேகரை புதுக்கோட்டை சிறையிலும், ஹானாபேகத்தை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியது: சென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான குணசேகர், சமூகவலைதளம் மூலம் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஹானா பேகத்தின் மகளைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
பின்னர் உரிய ஆவணங்களின்றி வங்கதேசம் சென்று மனைவியுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாமியார் ஹானாபேகத்துடன் குணசேகர் தமிழகத்துக்கு வந்து, கும்பகோணத்தில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி, இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம் என்றனர்.