

சென்னை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில் செல்வி மகன் பிரசாந்த் (19). எழில்செல்வி சென்னையில் நடிகை ராதிகா வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் பிரசாந்த் தனது மாமா ரமேஷ் என்பவருடன் வீடுகளுக்கு டைல்ஸ் போடும் வேலை செய்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த 27-ம் தேதி சென்னையில் உள்ள தமது தாயை பார்க்கச் செல்வதாக தாய்மாமனிடம் கூறிவிட்டு வந்த பிரசாந்த், மறுநாள் 28-ம் தேதி தனது நண்பருக்கு வீடியோ கால் செய்து தம்மை யாரோ அடிப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
பின்னர் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டதாக கடலூர் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் கடலூர் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்தின் நண்பன் வேதராசு என்பவரது மனைவியுடன் பிரசாந்துக்கு தவறான உறவு இருந்ததும், இதனால் வேதராசு தனது நண்பர் தினேஷ் என்பவருடன் சேர்ந்து பிரசாந்தை பழவேற்காடு கடற்கரை பகுதியில் கொலை செய்து மணலில் புதைத்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கடலூர் போலீஸார் இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் பழவேற்காடு அடுத்த சாட்டாங்குப்பம் கடற்கரை பகுதியில் திருப்பாலைவனம் போலீஸாரின் உதவியுடன் மணலில் புதைக்கப்பட்ட சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை சம்பவம் நிகழ்ந்தது திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லை என்பதால், அவர்கள் வேதராசு, தினேஷ் மீது கொலை வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.