மதுரை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பியதாக பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகிய இரு யூடியூபர்கள் மீது 5 பிரிவுகளில் மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சீமான் மீது அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் மீனவப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாருக்கு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீரன் திருமுருகன் கொடுத்த புகார் மனுவில், ‘சீமான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அவதூறு, தனிமனித தாக்குதல் செய்யப்படுகிறது.
அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பிஸ்மி என்பவர் பலதரப்பட்ட யூடியூப் வலைதளங்களில் பரப்புகிறார்.
அவரது யூடியூப் சேனலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சீமான் ரூ.100 கோடி பெற்றதாக அவதூறு பரப்பியுள்ளார். தொடர்ந்து அவர் சீமான் மீது அவதூறு பரப்புவது நல்லதல்ல.
இதற்கிடையே, தமிழன் கோகுல் என்பவரும் அவரது முகநூல் பக்கத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீமான், தற்போதைய முதல்வர் விஜய்யின் காலில் விழுவது போன்று மார்பிங் செய்து பதிவிட்டுள்ளார்.
அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இப்புகாரின்பேரில் யூடியூபர்களான பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.