திருவள்ளூர்: தனியார் நிறுவன ஊழியர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி அளித்த புகாரின் பேரில், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டச் செயலாளர் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (45). மீஞ்சூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் மனைவி மகேஸ்வரி. நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய சத்தியமூர்த்தி, திடீரென விஷம் அருந்தி மயங்கி விழுந்தார்.
மகேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சத்தியமூர்த்தியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் சத்தியமூர்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
வட்டிக் கடன்
இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் மகேஸ்வரி புகார் அளித்தார். அதில், ``புங்கத்தூர் பகுதியில் வசிக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தனிடம் சத்தியமூர்த்தி ரூ.50 ஆயிரம் வட்டிக்கு வாங்கியிருந்தார்.
அதற்கான வட்டியை முறையாக கட்டிவந்த நிலையில் வெற்றிவேந்தன், முழு பணத்தையும் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கூறி சில மாதங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தியின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்றார்.
மேலும் சத்தியமூர்த்தி, திருவள்ளூர் அருகே உள்ள வள்ளுவர் புரத்தைச் சேர்ந்த ராம் என்கிற ராமதாஸிடம் ஏலச்சீட்டு கட்டி
வந்தார். அப்பணத்தை ராம், தனக்கு சத்தியமூர்த்தி அளிக்கவேண்டிய கடன் தொகைக்காக எடுத்துக் கொண்டு, தொடர்ந்து ஏலச்சீட்டை செலுத்துமாறு வற்புறுத்தி வந்தார்.
கொலை மிரட்டல்
பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரும் தன்னிடம் சத்தியமூர்த்தி கடனாகப் பெற்ற பணத்தை அளிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
வெற்றிவேந்தன், ராம், ரஞ்சித் ஆகிய 3 பேரும் வட்டிப்பணம் உள்ளிட்டவற்றை கேட்டு, கொலை மிரட்டல் விடுத்ததால் மனவேதனை அடைந்த என் கணவர் சத்தியமூர்த்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆகவே என் கணவர் தற்கொலைக்கு காரணமான இவர்கள் 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் பேரில் புல்லரம்பாக்கம் போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தி அதனடிப்படையில், சத்தியமூர்த்தியை தற்கொலைக்கு தூண்டியதாக வெற்றிவேந்தன், ராம், ரஞ்சித் ஆகிய 3 பேர் மீதும் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.