பெரியகுளம்: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.74 லட்சம் மோசடி செய்ததாக மக்கள் தொடர்பு அலுவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தாமரைக்குளம் மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்த முனீஸ்வரன் மனைவி சாந்தி (48).
இவரது மகன் சூரியநாராயணன் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். 2021-ல் சாந்தி, தேனி ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரிந்த சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டார்.
அப்போது தனக்கு உயரதிகாரிகள், அரசியல்வாதிகளை நன்கு தெரியும், அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சண்முகசுந்தரம் கூறியுள்ளார். இதை நம்பிய சாந்தி ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார்.
இதேபோல, செல்லத்தம்பி, பவித்ரா, பழனிக்குமார், முத்துப்பாண்டி ஆகியோரிடமும் ரூ.24 லட்சம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சாந்தி புகார் செய்தார். இதனடிப்படையில், சண்முகசுந்தரம், அவரது மனைவி செண்பகவல்லி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். புகாருக்கு உள்ளான சண்முகசுந்தரம் தற்போது சேலம் மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.