க்ரைம்

பிசியோதெரபி செய்வதாக ஏமாற்றி முதியவரிடம் நகை பறித்ததாக பெண் யூடியூபர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த தம்மத் துக்கோணத்தைச் சேர்ந்த யூடியூபர் மதுமிதா (28) வீட்டில் 4 பேர் சேர்ந்து நகை, பணத்தை திருடினர். புகாரில் 118 பவுன் நகை திருட்டு போன தாக மதுமிதா தெரிவித்திருந்தார். ஆனால், கைது செய்யப்பட்டிருந்தவர்களிடம் இருந்து 98 பவுன் நகைகள் மட்டுமே மீட்கப்பட்டன. திருட்டு போன நகைகளின் அளவை அதிகமாக கூறி போலீஸாரிடம் பொய் புகார் கொடுத்ததாக மதுமிதா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே, 5 பவுன் நகையை முதியவரிடம் இருந்து பறித்ததாக மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் விவரம்: திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பேச்சிமுத்து (89). இவர், ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘முதுகு வலிக்காக பிசியோதெரபி சிகிச்சைக்கு செல்வது வழக்கம். அப்போது தம்மத்துக்கோணத்தை சேர்ந்த மதுமிதா அறிமுகமானார். கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலிக்கு வந்த அவர், எனது காரில் ஏறி எனக்கு பிசியோதெரபி செய்ய முயன்றார்.

இதற்கு நான் விருப்பப்படாமல் மதுமிதாவை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டேன். அப்போது, எனது 5 பவுன் நகை காணவில்லை. இதுபற்றி மதுமிதாவிடம் கேட்டபோது, என்னைப் பற்றி கூறி அசிங்கப்படுத்தி விடுவதாக தெரிவித்தார்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீஸார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT