சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீது, மேலும் ஒரு சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 7-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 11 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியான நிலையில், வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பணப்பரிமாற்றம் மேற்கொண்ட அவரது மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன், கார் ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வீரமணியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள, வாரம் ஒருமுறை அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பை வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு புலனாய்வு குழு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜெம் வீரமணி மீது ஏற்கெனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தற்போது பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், 7-வதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமும் ஜெம் வீரமணியின் பெண் தோழியான சாந்தியின் வீட்டில் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவ்வழக்குகள் தொடர்பாக வீரமணிக்கு உதவிய ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல் நேற்று (18-ம் தேதி) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 11 சிறுமிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் ஜெம் வீரமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க வீரமணியை மிரட்டி பணம் பறித்த கும்பல் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.