சென்னை: பங்குச் சந்தை ஆலோசகராகவும், தொழில் அதிபராகவும் இருப்பவர் பி.ஆர்.சுந்தர். இவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவர் மீது பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த 28 வயதுடைய பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார்.
அதில் கூறியிருந்ததாவது: சென்னை பட்டினப்பாக்கத்தில் வசிக்கும் தொழில் அதிபரான பி.ஆர்.சுந்தரிடம் பேட்டி எடுப்பதற்காக, எங்கள் தொலைக்காட்சி சார்பில் அவரை சந்தித்தேன்.
அதைத் தொடர்ந்து அவரோடு எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, அடிக்கடி போனிலும் பேசினார். ஒருநாள் சந்திப்பின்போது, திடீரென்று என்னை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
நான், கடுமையாக எதிர்வினையாற்றி விட்டு அவரது வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன். இதையடுத்து, பி.ஆர்.சுந்தர் நடந்த சம்பவத்துக்கு என்னிடம் போனில் மன்னிப்பு கேட்டார். நேரில் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
அவரது பேச்சை நம்பி, வீட்டுக்கு தனியாக சென்றேன். என்னிடம் மன்னிப்பு கேட்பார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை சட்ட விரோதமாக அவரது வீட்டு அறையில் அடைத்து வைத்து, மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். வீட்டில் அவரது மனைவியும் அப்போது இருந்தார்.
எனவே, அவர் மீதும், அவரது மனைவி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்தனர்.
இதன் தொடர்ச்சியாக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின்கீழ், பி.ஆர்.சுந்தர் மீதும், அவரது மனைவி மங்கையர்க்கரசி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை பி.ஆர்.சுந்தர் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பி.ஆர்.சுந்தரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரது மனைவி மங்கையர்க்கரசி மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.