சென்னை: உரிமையாளர் போல் ஆள்மாறாட்டம் செய்து, வேறு ஒருவரின் நிலத்தை ஐ.டி. ஊழியரிடம் விற்பனை செய்து ரூ.56.98 லட்சம் மோசடி செய்த நில புரோக்கர் கைது செய்யப்பட்டார். சென்னை மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்தவர் பார்த்திபன் (33).
தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு காலிமனை வாங்குவதற்காக இடம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நில புரோக்கரான பாலவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் ஹக் (52) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
அவர் பள்ளிக்கரணை விஜிபி சாந்தி நகரில் 2,430 சதுர அடி காலிமனை விலைக்கு உள்ளதாக கூறியுள்ளார். பின்னர் நில உரிமையாளர் என கூறி ஒருவருடன் 2021 பிப்.22-ம் தேதி ஒப்பந்தம் செய்து ரூ.56.98 லட்சம் கொடுத்து நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பணத்தை பார்த்திபனிடமிருந்து அப்துல் ஹக் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தான் வாங்கிய காலிமனையின் உண்மையான உரிமையாளர் வேறொருவர் என்பதும், ஆள்மாறாட்டம் மூலம் காலிமனையை பத்திரப்பதிவு செய்து, அப்துல் ஹக் மற்றும் அவரது அண்ணன் அப்துல் ஹாதி ஆகிய இருவரும் கூட்டாக ஏமாற்றி பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து பார்த்திபன் கடந்த ஜூன் 11-ம் தேதி சைதாப்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பார்த்திபன் அளித்த புகார் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ஹக்கை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரது அண்ணனை தேடி வருகின்றனர்.