

முகமது மஸ்தான் சர்புதீன், சீனிவாசன், சரத்
சென்னை: கஞ்சா வழக்கில் சினிமா தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.27.91 லட்சம் பணம், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என விசாரணை நடைபெற்று வருகிறது.
போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையை சென்னை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருமங்கலம் போலீஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸார் கடந்த 19-ம் தேதி திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக திருமங்கலத்தில் உள்ள பார்க் சாலையில் கண்காணித்தபோது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரன் (26) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவரிடமிருந்து எல்எஸ்டி எனும் போதை ஸ்டாம்புகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த முகமது மஸ்தான் சர்புதீன் (44), முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன் (25), வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.27.91 லட்சம், உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் சர்புதீன் சினிமா இணை தயாரிப்பாளர் எனவும், நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சர்புதீனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹரி பிரசாத் என்பவருடையது எனத் தெரியவந்தது.
எனவே அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வியூக வகுப்பாளரான ஹரி பிரசாத், சாய் ஆகியோரை போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதையறிந்த அதிமுகவினர் அரும்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முழுமையான விசாரணைக்குப் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, “எந்த தவறும் செய்யாத எங்கள் கட்சிக்கு ஆதரவாகப் பணிபுரியும் இருவரை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவர்களுக்காக போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். தற்போது ஆவணங்கள் எதுவும் அவர்களிடமிருந்து கிடைக்காததால் இருவரையும் போலீஸார் விடுவித்தனர்.
அதிமுகவுக்காக பணிபுரியும் நபர்கள் யாராக இருந்தாலும் அதிமுக எப்போதும் அவர்களுடன் துணை நிற்கும்” என்றார்.
இது ஒருபுறம் இருக்க சர்புதீன் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையினர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக போதைப் பொருட்களை வைத்திருந்தாரா? இவரது பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.