சென்னை: பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
வடபழனி ஆற்காடு சாலை பானுமதி தெருவில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, மின்னஞ்சல் நேற்று முன்தினம் இரவு வந்தது.
அதில் அந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அலுவலக ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் கே.கே.நகர் போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால் அங்கு எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.