இடது கென்னத் உடன் காவலர், வலது சுவேதா
புதுச்சேரி: பெங்களூருவில் பெற்றோர், தங்கையை கொலை செய்த பெண்ணின் காதலனும் புதுவையில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு நகர் கே.எஸ் புரத்தைச் சேர்ந்த சுவேதா என்ற பெண் தனது தந்தை, தாய், தங்கை என மூன்று பேரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இந்த நிலையில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் பிரியாணி கடையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த சுவேதாவை நேற்று முன்தினம் உருளையன்பேட்டை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இதில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அப்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தீவிர விசாரணை நடத்தியபோது, தனது தந்தை, தாய், தங்கை என மூன்று பேரை கொலை செய்துவிட்டு இங்கு வந்ததாகக் கூறினார்.
மேலும் தனது நண்பர் கென்னத் கோவா சென்று விட்டதாகவும் தான் புதுச்சேரி தப்பிவந்து அறை எடுக்கச் சென்றபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் தகவல் அளித்தார்.
கொல்லப்பட்ட சோமசுந்தரம், முத்துலட்சுமி, சுப்ரியா
இதைக் கேட்ட போலீஸார் பெங்களூரு கேஎஸ் புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் பெங்களூரு போலீஸ் அதிகாரிகள் புதுச்சேரி வந்தனர். இதையடுத்து சுவேதா பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில் உருளையன்பேட்டை காவல்நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் நேற்று இரவு அண்ணா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் ஒரு நபர் போலீஸாரை பார்த்தவுடன், தொப்பி - முழு கவசத்தை அவசர அவசரமாக மாட்டியதை கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உதவி ஆய்வாளர் ராமலிங்கம் அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதையடுத்து அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் திடீரென்று பைக்கில் இருந்து குதித்து தப்பியோட முயன்றார். உடனே அந்த நபரை துரத்திச் சென்று பிடித்தனர்.
விசாரணையில், அந்த நபர் பெங்களூருவில் ஒரே குடும்பத்தில் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கென்னத் என்பது தெரியவந்தது.
பின்பு உருளையன்பேட்டை போலீஸார் சம்பவம் குறித்து பெங்களூரு கே.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அவர்கள் புறப்பட்டு வருகின்றனர். 3 பேரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுக்க உதவிய புதுச்சேரி நபர் யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தாய், தந்தை, தங்கை என மூன்று பேரை கொலை செய்துவிட்டு புதுச்சேரி தப்பி வந்த இளம் பெண் சுவேதாவை இதே உதவி ஆய்வாளர் ராமலிங்கம் தான் கைது செய்து, பெங்களூரு போலீஸில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.