ஷிமுல் தாஸ், வலன்தியா பீட்ரைஸ்

 
க்ரைம்

சென்னை | போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அதிகாரிகள், சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் கடந்த 30-ம் தேதி புகார் ஒன்று அளித்தனர்.

அதில், ‘வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஷிமுல் தாஸ் (32) என்பவர் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மலேசியாவுக்கு செல்வதற்காக முயற்சி செய்தார்.

இதேபோல், இலங்கை நாட்டைச் சேர்ந்த வலன்தியா பீட்ரைஸ் (24) என்ற பெண், போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று இலங்கை செல்ல முயன்றார். இவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தியதில். இருவரும் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் வங்க தேசத்தை சேர்ந்த ஷிமுல் தாஸ் 2017-ம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து, வங்கதேச பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளதும், பிறகு இந்திய ஆவணங்களான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று தற்போது மலேசியாவிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது.

இதேபோல, இலங்கையை சேர்ந்த வலன்தியா பீட்ரைஸின் பெற்றோர் 1984-ம் ஆண்டு இலங்கையிலிருந்து சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்து குடியேறினர். வலன்தியா பீட்ரைஸ் ஊட்டியில் பிறந்துள்ளார்.

பிறகு, இந்திய ஆவணங்களான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்று, அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று, இலங்கைக்கு செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT